Monday, March 3, 2014

கல் பேசும் சரித்திரம்... முனைவர் ச.மகாதேவன்




கல் காலத்தைக் கடந்தும் சரித்திரம் சொல்லும் உறுதிச் சொல்லாக அமைகிறது.

ஓலைச்சுவடி அழிந்துபோகும்,பட்டுத் துணியில் எழுதப்ப்பட்டவை அழிந்துபோகும்,சொற்கள் காற்றுமண்டலத்தில் கரைந்துபோகும்..ஆனால் கல்லில் பொதிந்துதரப்பட்ட வரலாறு காலம் கடந்தும் இன்றும் நின்று சரித்திரச் சுவடுகளாய் அமைகின்றன.

கற்பின்கனலி கண்ணகிக்குச் சொல்லால் காவியம் படைக்க இளங்கோவடிகள் முடிவு செய்தபோது மாமன்னன் சேரன்செங்குட்டுவன் தமிழரைப் பழித்துப் பேசிய இமயமன்னர்கள் கனகனையும் விசயனையும் வென்று அவர்களின்தலைமீதேற்றிக் கல்லினைக் கொணர்ந்து கண்ணகிக்குக் கோவில் அமைத்தான் எனும் வரலாற்றைச் சிலப்பதிகாரம் நமக்குச்சொல்கிறது.

தமிழரின் வாழ்வு கல்சார்ந்த வாழ்வு.அம்மி மிதித்து தொடங்கும் இல்லறம்,கல்லால் செய்யப்பட்டு எண்ணெயிலும் நெல்லிலும் தண்ணீரிலும் பதப்படுத்தப்பட்டு திருகுடமுழுக்கு நிகழ்த்தப்பட்டு நவரத்தினக் கற்கள் சகிதம் மருந்து சார்த்தப்பட்டு வழிபாட்டுக்கு உரிய தெய்வமாகப் போற்றப்படும் சிறப்பினைப் பெறுவதும் கற்கள்தான்.

மன்னனின் புகழை மூவாயிரம் ஆண்டுகள் கழித்தும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் கற்கள்தான்.

சுமைதூக்கிவரும் தொழிலாளியின் பாரத்தைச் சுமைதாங்கிக் கல்லாக இறக்கிவைப்பதும் கற்கள்தான்.கிருஷ்ணாபுரம் சிற்பமாக,மகாபலிபுரம் ரதமாக,முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில், ஈராயிரம் ஆண்டுச் செழுமைமிக்க வள்ளுவத்தின் புகழ்பாடும் 133 அடி திருவள்ளுவரின் சரித்திரம் பாடும் பேறு பெற்றவையும் கற்கள்தான்.நிழலே விழாத தஞ்சைப் பிரகதீசுவரர் திருக்கோவில் கோபுரம் மாமன்னன் ராஜராஜசோழனின் சரித்திரம் பேசும் சாட்சிதானே.


.நடுகற்கள்,சதிக்கற்கள்,தொப்பிக்கற்கள்,குடைக்கற்கள்,சுமைதாங்கிக் கற்கள்,கோழிக் கற்கள் என கற்கள் இன்னமும் சரித்திரம் பேசிகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கிமு 1000 தொடக்கம் கிபி 200 வரையாகும் என்று வரையறுக்கப்படுகிறது.உலோகக் காலத்திற்கும் முற்பட்ட காலமாய் கருதப்படும் கற்காலத்தில் மனிதர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களும் கல்லாயுதங்களே.

நடுகற்கள்
......................
போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடப்படும் கற்களே நடுகற்கள். 

 “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும்” என்று சேரமான் பெருமாள் நாயனார் புராணத்தில் நடுகல் குறித்த பதிவு உள்ளது.

அகநானூறு எனும் சங்க இலக்கியத்தில் வீரமரணம் அடைந்த வீரரின் படம்,பெயர் ஆகிய அடையாளங்களோடு நடுகல்நடப்பட்டு அதற்குப் பூவும் புகையும் இட்டு வணங்கினர்.

நடுகற்களோடு மயில்பீலிகளைக் கட்டி அதற்குக் கள் படைத்தது வழிபட்டசெய்தியைப் புறநானூறு காட்டுகிறது.நடுகல்லை வழிபட்டால் மழை கொட்டும் என்று மக்கள் நம்பினர்.

தமிழி எனும் தூயதமிழ் எழுத்துப்பதிவுடன் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட நடுகல் புலிமான்கொம்பையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.அந்த நடுகல்

கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பனைஊரில் கி.பி.15 ஆம் நூற்றாண்டின் நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது.தூத்துக்குடி மாவட்டம் இளவேலங்கால் கிராமத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டின் நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது.

குதிரையில் பயணிக்கும் போர்வீரன் இந்த வீரக்கல்லில் அழகாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளான்.இந்த வீரக்கல் பாளையம்கோட்டை அருங்காட்சியகத்தில் காக்கப்படுகிறது.


புலிக்குத்தான் நடுகல்
................................................
கானகத்தில் புலியைக் கொன்று வீரமரணம் அடைந்த வீரனுக்கு புலிக்குத்தான் நடுகல் தர்மபுரி மாவட்டத்தில் கடத்துஊர் காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

சதிக்கற்கள்
................................
கணவன் இறந்தவுடன் சுவர்க்கம் கிடைக்க வேண்டி மனைவியும் அவனுடன் உடன்கட்டை ஏறுவது பண்டைக்காலம் முதலே வழக்கத்தில் இருந்தது.

சில நடுகற்களில் போரில் இறந்த வீரனுக்கு இருபுறமும் இருபெண்கள் நிற்பதைப் போல் கல்பதிவுகள் இருக்கக் காண்கிறோம்.

அவர்கள் அவ்வீரனைச் சொர்கத்திற்கு அழைத்துச் செல்லும் ரம்பயர்கள் என்று அறிகிறோம்.கணவர் இறந்துவிட்டார் என்று அறிந்துடன் தன் உயிரை உடன் மாய்த்துக்கொள்ளும் பெண்கள் மாசதிக்கல் நடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தியாவின் தொன்மையான மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த மாசதிக்கல் ஆந்திரமாநிலத்தின் நாகார்ஜுனகொண்டா எனும் இடத்தில் கிடைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி எனும் இடத்தில் கணவனின் சிதையோடு எரிந்துபோன பதினைந்தாம் நூற்றாண்டு சார்ந்த ஒரு பெண்ணின் மாசதிக்கல் கண்டுபிடிக்கப் பட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் காக்கப்பட்டுவருகிறது
 
.புறநானூறு எனும் சங்கஇலக்கியத்தில் பூதப்பாண்டியன் இறந்துபோக அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உயிர்நீத்த செய்தியை அறியமுடிகிறது.

கோழிக்கல்
.............................
மனிதர்களுக்கு மட்டுமன்றி சேவல்களுக்கும் வீரக்கற்கள் அமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

சேவல்சண்டை நடத்தப்பட்டு எதிர்த்துப் போரிட்ட சேவலைக் கிழித்து அதன் சிறகுகளைப் பிய்த்து எறிந்த வீரச்சேவலைப் பாராட்டி வென்ற சேவலுக்குக் கோழிக்கல் வைக்கப்பட்டதைக் காணமுடிகிறது

இரண்டுக்கு இரண்டு எனும் அளவில் செதுக்கப்பட்ட கல்லில் வீரப்போரில் வென்ற சேவல் படம் புடைப்புச் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்தளூர் எனும் ஊரில் சேவல் படம் பொறிக்கப்பட்டு அதன்கீழ் அதன் பெருமையும் வீரமும்  வட்டேழுத்தில் பொறிக்கப்பட்டு மரியாதை தரப்பட்டுள்ளது.

உருண்டை நடுகல்
...........................................
செவ்வக வடிவில் வழக்கமாக நடுகற்கள் அமைந்திருக்கும்.வீரமரணம் அடைந்த வீரனின் உருவமும் அவனுக்கு அருகில் கத்தி,வாள்,அம்பு போன்ற போர்க்கருவிகள் புடைச்சிற்பமாய் அமைக்கப்பட்டு அவன் புகழ் அதில் எழுத்து வடிவில் பொறிக்கப்படும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக தூத்துக்குடி மாவட்டம் இளவேலங்கால் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டு சார்ந்த நடுகல் உருண்டை வடிவில் காணப்படுகிறது.

இந்த வேறுபட்ட நடுகல் பாளை.அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

.
சுமைதாங்கிக்கல்
.........................................
வயிற்றில் கருவோடு மரணம் அடைந்த கர்ப்பிணிப்பெண்ணின் பாரம்போக்க சுமைதாங்கிக் கல் வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு.

வண்டிகள் அற்ற காலத்தில் தலைச்சுமையோடு பயணிக்கும் தொழிலாளர்கள் இந்தச் சுமைதாங்கிக் கற்கள் மீது தங்களின் தலைச்சுமையை இறக்கி வைப்பர்.

மனிதர்கள் தங்களின் பாரத்தை இறக்க வயிற்றில் பாரத்தோடு இறந்துபோன பெண் சுவர்க்கம் செல்வாள் என்ற நம்பிக்கை இன்னமும் கிராமத்தில் உள்ளது.


இளவட்டக்கல்
.....................................
உருண்டை வடிவத்தில் அமைந்த விளையாட்டுக் கல்.ஊரின் நடுப்பகுதியில் ஆலமரத்தடியில் கிடக்கும் இக்கல்லைத் தலைக்கு மேல் தூக்குபவருக்குப் பெண்ணின் தந்தையார் தம் மகளைத் திருமணம் முடித்துத்தருவார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் சொக்கட்டாம்தோப்பு எனும் கிராமத்தில் இன்றும் இளவட்டக்கல்லைப் பார்க்கலாம்.

கற்கள் வெறும் கற்கள் அன்று.

 அவை கடந்தகாலத்தின் நிகழ்கால நிஜங்கள்.